ஈரப்பதம்

முயல்கள் அதிக ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை, எனினும் ஈரப்பதம் 50 சதவிகிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் முயல்களில் நோய்த் தாக்கம் ஏற்படுத்தலாம். எனவே மழைக்காலங்களில் ஈரப்பதத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு நீர்க்கசிவும் உள்ளே ஏற்படாதவாறு தண்ணீர்க்குடுவைகளை வெளியிலேயே வைப்பது நல்லது.

காற்றோட்டம்

சுத்தமான புகையற்ற காற்று முயல்களுக்கு மிக அவசியம். முயல் பண்ணையில் தூயகாற்று தங்கு தடையின்றி உலவுமாறு அமைந்திருத்தல் வேண்டும். கோடைக்காலங்களில் காற்று குளிர்ந்ததாக இருத்தல் வேண்டும். வறண்ட காற்று முயல்களின் சுவாசத்திற்கு ஏற்றதல்ல. எனவே ஆங்காங்கு மரங்களை நட்டு வளர்த்தல் நன்மை பயக்கும்.

சப்தம்

முயல்களில் ஒலியின் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனினும் முயல்கள் அதிக சப்தத்தை விரும்புவதில்லை. குறிப்பாக குட்டிகள் பாலூட்டும் போதும், இனச்சேர்க்கையின் போதும் சிறு சப்தம் கூட பாதிப்பு ஏற்படுத்தலாம்.

கூண்டு முறை

கூண்டின் உயரம் 50 செ.மீ ஆகவும், அகலம் 70 செ.மீ நீளம் 90 செ.மீ ஆகவும் இருத்தல் வேண்டும். இது பெண் முயல்களுக்கான கூண்டின் அளவு. ஆண் முயல்களுக்கு இவை முறையே 45 செ.மீ, 60 செ.மீ, 60 செ.மீ. கூண்டு செய்யும் கம்பி அளவு அடிப்பாகத்தில் 1 செ.மீ x 1 செ.மீ பக்கங்களில் 2.5 செ.மீ x 2.5 செ.மீ அளவும் இருக்கவேண்டும். கூண்டின் அடிப்பாகம் தரைமட்டத்தில் இருந்து 75-90 செ.மீ உயரத்தில் இருக்குமாறும், எலி, பாம்பு தொல்லைகள் இல்லாதவாறும் கூண்டுகளை வைக்கவேண்டும். கூண்டுகள் நல்ல குளிர்ந்த நிழற்பாங்கான இடத்தில் அமைக்கப்படவேண்டும்.

Rabbit_cages

கொட்டில் முறை

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட முயல் குட்டிகளை 1.2 மீட்டர் அகலம், 1.5 மீ நீளம், 0.5 மீ உயரம் கொண்ட கொட்டிலில் அடைக்கலாம். ஒரு கொட்டிலில் 20 குட்டிகள் வரை அடைக்கலாம். பருவமடைந்த ஆண், பெண் குட்டிகளை ஒரு கொட்டிலில் அடைத்தால் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே ஒவ்வொன்றையும் தனியே அடைத்தல் சிறந்தது.